சேலம் மாவட்டம் ஆத்தூர் ஆர்.என்.பாளையத்தை சேர்ந்தவர் வைஷ்ணவி (33). இவர், நாமக்கல்லில் உள்ள ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்தார். திருமணமான இவர், குடும்ப பிரச்சனை காரணமாக விவாகரத்து பெற்றார். பின்னர் ஈரோட்டில் பணிபுரிந்தபோது உடன் பணிபுரிந்த காவலர் சேகர் என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். சேகர், தற்போது நீலகிரி மாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். பெண் காவலர் வைஷ்ணவி திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றிய நிலையில் கடந்த மாதம் 22 ம் தேதி தான் நாமக்கல்லில் உள்ள ஆயுதப்படையில் சேர்ந்தார். அங்கு அவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பணிக்கு சென்று வந்தார். இந்நிலையில் வீட்டில் இருந்த வைஷ்ணவி கடந்த வியாழக்கிழமை பூச்சிகளுக்கு அடிக்கும் விஷ மருந்தை குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர், தாமாகவே நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். தொடர்ந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் இன்று(30-12-2023) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நாமக்கல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், குடும்ப பிரச்சனை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இருந்தாலும் அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்கொலை செய்து கொண்ட பெண் காவலர் வைஷ்ணவிக்கு 4 வயதுடைய ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.