Rock Fort Times
Online News

திருப்பதி மலையில் பக்தர்கள் நடந்து செல்லும் பாதையில் மீண்டும் சிறுத்தை, கரடி நடமாட்டம்…

திருப்பதி மலையில் உள்ள வனப்பகுதிகளில் சிறுத்தைகள், கரடிகள் வசிப்பதாக கூறப்படுகிறது.  கடந்த 3 மாதங்களுக்கு முன் சிறுத்தை ஒன்று கடித்து குதறியதில் சிறுமி ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு சிறுவன் படுகாயத்துடன் உயிர் தப்பினான். அதனைதொடர்ந்து மலைப்பாதையில் சுற்றித் திரியும் சிறுத்தைகளை பிடிக்க வனத்துறையினர் கூண்டுகளை அமைத்தனர். அந்த கூண்டுகளில் ஐந்து சிறுத்தைகள் சிக்கின. மேலும், பக்தர்களின் பாதுகாப்புக்காக தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக மலையடிவாரத்தில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக நடந்து செல்லும் பக்தர்களுக்கு கைத்தடிகள் வழங்கப்பட்டன.

நடைபாதைகளில் அதிக அளவில் வெளிச்சத்தை கொடுக்கும் மின்விளக்குகளும் பொருத்தப்பட்டன. இந்நிலையில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடந்து செல்ல பயன்படும் அலிப்பிரி வழி நடைபாதையில் மீண்டும் சிறுத்தைகள் மற்றும் கரடிகள் நடமாட்டம் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள டிராப் கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகளை பார்வையிட்டு வனத்துறையினர் உறுதிப்படுத்தி உள்ளனர். எனவே, திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடந்து செல்லும் பக்தர்கள் குழுக்களாக செல்ல வேண்டும் என்றும் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றும் தேவஸ்தான நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்