திருச்சியில் இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பதில் அ.தி.மு.க- திமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு…!
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திருச்சி பறவைகள் சாலை பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில், திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். பின்னர், தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பதற்காக அரசியல் கட்சியினர் திரண்டு இருந்தனர். குறிப்பாக ம.தி.மு.க. வேட்பாளர் துரைவைகோவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினரும், அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பையாவுக்கு வாக்கு சேகரிக்க அ.தி.மு.க.வினரும் திரண்டு இருந்தனர். இந்தியா கூட்டணி கட்சியினர் மைதானத்தின் வாசலின் இருபுறமும் நின்று கொண்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த அ.தி.மு.க.மற்றும் கூட்டணி கட்சியினர் நீங்கள் ஒரு புறம் நில்லுங்கள். நாங்கள் ஒரு புறம் நிற்கிறோம் என்று கூறினார்கள். அதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இருதரப்பினரையும் சமரசம் செய்தனர். பின்னர் இரு தரப்பினரும் தனித்தனியாக இருபுறமும் நின்று வாக்கு சேகரித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.