Rock Fort Times
Online News

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத த.வெ.க.அரசை கண்டித்து திருச்சியில் ஜூலை 18-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

பெண்களின் பாதுகாப்பில் போதிய அக்கறை செலுத்தாத தவெக அரசைக் கண்டித்து, திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் வருகிற 18-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதி, புள்ளம்பாடி ஒன்றியம், சிறுகளப்பூர் பகுதியில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்விஷயத்தில் தவெக அரசு துரித நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். இச்செயல் ஆட்சியாளர்களின் அலட்சியத்தையும், மெத்தனப் போக்கையுமே காட்டுகிறது. இதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிலையில், பெண்களின் பாதுகாப்பில் போதிய அக்கறை செலுத்தாத, போதைப் பொருட்கள் புழக்கத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்தத் தவறிய
குதிரை பேரத்தை ஊக்குவித்து வருகின்ற தவெக அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில், 18.7.2026 (சனிக்கிழமை) காலை 10 மணியளவில், புள்ளம்பாடி அண்ணா திடலில் கழக மகளிர் அணிச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான
பா. வளர்மதி தலைமையிலும், திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் டி.என்.சிவக்குமார் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில், திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த, லால்குடி தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் லீமாரோஸ், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்