த.வெ.க. குதிரைபேரம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்த வேண்டும்…* லஞ்சஒழிப்புத் துறைக்கு தி.மு.க. பரபரப்பு கடிதம்…!
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெகவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து, திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சி அமைத்தது. அதிமுகவின் ஒரு பிரிவு எம்எல்ஏக்களும் தவெக அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தனர். இதன் தொடர்ச்சியாக அதிமுகவில் இருந்து விராலிமலை சி.விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, மதுராந்தகம் மரகதம் குமாரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்தியபாமா ஆகிய எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர்.
குதிரை பேரம் நடத்தி அதிமுக எம்எல்ஏக்களை தவெக விலைக்கு வாங்கிவிட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக திமுக, பாஜக தரப்பில் இருந்தும் ஆளுநரிடம் தனித்தனியே புகாரும் அளிக்கப்பட்டது.
பரபரப்பு புகார் கடிதம்,
இந்தநிலையில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சார்பில் இன்று(13-07-2026) ஒரு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில்
இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு;
- தி.மு.க. எம்.எல்.ஏ.ஆஸ்டினிடம் த.வெ.க.வினர் குதிரைபேரம் நடத்தியுள்ளனர்.
- அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்து த.வெ.க.வில் இணையுமாறு வற்புறுத்தியுள்ளனர்.
- கட்சியில் மாற த.வெ.க.வினர் தன்னை அணுகியதாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெளிப்படையாக கூறியுள்ளார்.
- ம.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்யுமாறு முதலமைச்சர் கூறியதாக வைகோ பேசி உள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.