ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின விழாவை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமான நிலையத்தின் உள்ளே நுழையும் வாகனங்கள் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் தமிழக போலீசாரால் தீவிர சோதனைக்கு பின்னரே விமான நிலையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து விமான நிலையத்தின் முனைய நுழைவு வாயிலில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரால் பயணிகளின் உடைமைகள் மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்பே அனுமதிக்கப்படுகின்றனர். அதன்பிறகு, பயணிகளின் உடைமைகள் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்யப்படுகிறது. இந்த சோதனைகள் முடிந்தபிறகு விமானத்தில் பயணிகள் ஏறுவதற்கு முன்பாக விமான நிறுவனத்தினரால் பயணிகளின் உடைமைகள் மீண்டும் சோதனை செய்யப்படுகிறது. இந்த சோதனையானது வருகிற 17ம் தேதி வரை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், விமான நிலையத்தின் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பார்க்கிங் பகுதிகள் நவீன கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மோப்ப நாய்கள் மூலமும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Comments are closed.