நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி மார்ச் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே கட்சியினர் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தையை இறுதிசெய்து, தொகுதி பங்கீட்டை முடிவு செய்யும் பணியில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அந்தவகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் இம்மாதம் 21ம் தேதி முதல் வருகிற மார்ச் 1ம்தேதிவரை சென்னை தலைமைக்கழகத்தில் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதையொட்டி, கடந்த 8 நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அதிமுகவினர் ஆர்வத்துடன் எம்.பி. தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில், திருச்சி எம்.பி.தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து திருச்சி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி துணைச்செயலாளரும், முன்னாள் அரசு வழக்கறிஞருமான ஆர்.எட்வின் ஜெயக்குமார் விருப்பமனு அளித்துள்ளார். ஆரம்பத்தில் திமுக சார்ந்து இயங்கிவந்த எட்வின் ஜெயக்குமார், கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பொன்மலை ஜி- கார்னரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். அதிலிருந்து தொடர்ந்து கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக அதிமுகவில் இவர் கட்சிப்பணியாற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.