Rock Fort Times
Online News

விளையாடிய போது விபரீதம்: கரூர் அருகே காருக்குள் மூச்சுத்திணறி சிறுவன் உயிரிழப்பு…!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகேயுள்ள கழுகூரை சேர்ந்தவர் வேலு (36). கொத்தனார். இவரது மனைவி மாரீஸ்வரி (30). இவர்களின் மகன் சஞ்சீவி(4) நேற்று அப்பகுதியை சேர்ந்த சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது வீட்டருகே கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அந்தக் கார் கவர் போட்டு மூடப்பட்டு இருந்தது. அந்த காருக்குள் ஏறி சிறுவன் சஞ்சீவி விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக கதவு பூட்டிக்கொண்டதால் திறக்க முடியாமல் சிறுவன் சஞ்சீவி வெளியேற முடியாமல் தவித்தான். விளையாட சென்ற மகனை காணவில்லை என பதறிய பெற்றோர் மற்றும் உறவினர்கள் நீண்ட நேரமாகியும் கண்டு பிடிக்க முடியாமல் தவித்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் வீட்டருகே நின்ற காரின் உறையை அகற்றி விட்டு கண்ணாடி வழியாக பார்த்தப்போது சிறுவன் சஞ்சீவி காரினுள் மயங்கிய நிலையில் கிடந்தான். உடனடியாக கார் கதவை திறந்து சிறுவனை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தோகைமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறுவன் உடலை கைப்பற்றி அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், காருக்குள் சிறுவன் சிக்கிக் கொண்டதால் மூச்சு திணறி இறந்திருக்கலாம் என்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்