புதுக்கோட்டை கணேஷ் நகர் 1ம் வீதியை சேர்ந்தவர் ஜான் தேவசகாயம். இவர் டி.இ.எல்.சி. சபையில் போதகராக உள்ளார். இவரின் மனைவி எஸ்தர் கலான். இவர் டி.இ.எல்.சி. நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் போதகர் ஜான் தேவசகாயம் மருத்துவ சிகிச்சைக்காக கோவை சென்றிருந்தார். அவருடன் மனைவி எஸ்தர் கலான் உள்ளிட்ட குடும்பத்தினரும் சென்றிருந்தனர். இதனால் புதுக்கோட்டையில் உள்ள அவரது வீடு பூட்டப்பட்டு இருந்தது. கோவையில் சில நாட்கள் தங்கி இருந்து மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொண்ட ஜான் தேவ சகாயம் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று(28-05-2024) கோவையில் இருந்து புதுக்கோட்டை திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த சுமார் 80 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து கணேஷ் நகர் காவல் நிலையத்திற்கு அவர் தகவல் அளித்தார். தகவலின்பேரில் அங்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் பீரோவில் பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
Comments are closed.