சத்துணவு முட்டைகளை அட்டை, அட்டையாக விற்ற அரசு பெண் ஊழியர் அதிரடி கைது: வாங்கிய ஹோட்டல் உரிமையாளர் மீதும் நடவடிக்கை…!
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவ- மாணவிகளுக்கு மதிய நேரங்களில் முட்டையுடன் சத்துணவு வழங்கப்படுகிறது. அதேபோல அங்கன்வாடி மையங்களில் படிக்கும் குழந்தைகளுக்கும் முட்டை வழங்கப்படுகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் உள்ள ரத்னா என்கிற ஹோட்டலில் சத்துணவு முட்டைகள் அட்டை, அட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த ஹோட்டலுக்கு உணவு சாப்பிட வந்தவர்கள் இதனைப் பார்த்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில், துறையூர் தாசில்தார் மோகன் மற்றும் சத்துணவுத் திட்ட அலுவலர்கள், உணவு பாதுகாப்பு திட்ட அலுவலர்கள் ஆகியோர் சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு ஏராளமான சத்துணவு முட்டைகள் இருந்தன. அந்த முட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த ஹோட்டலை இழுத்து மூடி சீல் வைத்தனர். மேலும், அந்த ஹோட்டலுக்கு சத்துணவு முட்டைகளை சப்ளை செய்தவர் யார்? என்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், திருச்சி மாவட்டம் மதுராபுரி சத்துணவு அமைப்பாளர் வசந்தகுமாரி என்பவர் ஹோட்டலுக்கு சத்துணவு முட்டைகளை சப்ளை செய்தது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். குழந்தைகளுக்கு அரசால் வழங்கப்படும் சத்துணவு முட்டைகளை வாங்கி பயன்படுத்தியதாக ஹோட்டல் உரிமையாளர் ரத்தினமும் கைது செய்யப்பட்டார். இது ஒருபுறம் இருக்க வசந்தகுமாரியை பணியிடை நீக்கம்( சஸ்பெண்ட்) செய்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Comments are closed.