திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பணி புரிந்து வரும் பெண் காவலர் பிரீத்தி என்பவர் தினந்தோறும் சமூக வலைதளத்தை கண்காணித்து அதில் வரும் ஆபாசமான மற்றும் சட்டவிரோத செயல்கள் தொடர்பான பதிவுகள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அப்போது வாலிபர் ஒருவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பெண்கள் அணியும் உள்ளாடைகளை அணிந்து கொண்டு திரைப்பட பாடலை திருத்தி பாலியல் சம்பந்தமாகவும், பெண்களை இழிவுபடுத்தும் விதமாகவும், அருவருக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்தியும் தொடர்ந்து வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருவது தெரிய வந்தது. இவர் பதிவிடும் வீடியோக்கள் அனைத்தும் பெண்களை பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கேலி, கிண்டலுக்கு ஆளாக்கும் வகையில் இருந்தது. இதுகுறித்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை பதிவேற்றம் செய்த வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த கௌதம் (24) என்பவரை கைது செய்தனர்.
Comments are closed.