பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை-தேர்தல் ஆணையத்திற்கு மா.கம்யூனிஸ்ட் கட்சி கடிதம்…!
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தை மாநிலக்குழு உறுப்பினர்கள்
வெ. ராஜசேகரன், ஜி. செல்வா ஆகியோர் தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து அளித்துள்ளனர். அக்கடிதத்தில், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக அவரது ஊழியர்கள் – உறவினர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறி, சட்டத்திற்கு புறம்பாக வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதற்காக சுமார் ரூ.4.5 கோடி பணத்தை நேற்று (06.04.2024) நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் எடுத்துச் சென்றுள்ளனர். தேர்தல் அதிகாரிகள் தாம்பரம் ரயில் நிலையத்தில் சோதனையிட்டு அந்த பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். பிடிபட்ட 3 நபர்கள் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் நெருங்கிய உறவினர் எனவும் அப்பணத்தை திருநெல்வேலியில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனிடம் கொடுப்பதற்காக எடுத்துச் சென்றோம் என கூறியுள்ளனர். இது தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானது மட்டுமின்றி சட்டத்திற்கு புறம்பான செயலாகும். மேலும், தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்காமலும், சட்டத்திற்கு புறம்பாகவும் செயல்படுவதாக பல இடங்களில் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆகவே, பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பண முறைகேடுகள் நடைபெறா வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.