Rock Fort Times
Online News

திருச்சியில் ஜே.பி நட்டாவின் வாகன பேரணிக்கு மாற்றுப்பாதையில் அனுமதி வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு…!

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக அகில இந்திய பாரதிய ஜனதா தலைவர்கள் தமிழகம் வந்த வண்ணம் உள்ளனர். ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய தலைவர்கள் வருகை தந்துள்ளனர். இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா திருச்சியில் தேர்தல் பிரச்சார ‘ரோடு ஷோ’ நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது.ஆனால், சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், பாஜகவினர், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பாக பாஜக நிர்வாகி ராஜசேகரன் தாக்கல் செய்த மனுவில், “நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜகவின் தேசிய தலைவர் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரம் மேற்கொள்கிறார். இன்று மாலை 4.30 மணி முதல் 7 மணி வரை திருச்சி காந்தி மார்க்கெட் முதல் மலைக்கோட்டை வரை ‘ரோடு ஷோ’ நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக முறையாக அனுமதி கோரி தேர்தல் அலுவலர் மற்றும் காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே, திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் இருந்து மலைக்கோட்டை வரை ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு அவசர வழக்காக விடுமுறை தினமான இன்று நீதிபதி முரளிசங்கர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில் குமார் ஆஜராகி, “‘ரோடு ஷோ’ நடைபெற தேர்வு செய்யப்பட்ட பாதை பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் நடை பாதையாக உள்ளது. இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் அந்தப் பாதையில், பல்வேறு மத வழிபாட்டுத்தலங்கள் உள்ளன. எனவே, அந்த பகுதியில் அனுமதி வழங்க முடியாது என அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதற்கு மாற்றாக கண்ணப்பா ஹோட்டல் முதல் இஎஸ்ஐ மருத்துவமனை வரை மாற்று பாதையில் ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கப்படுவதாக அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி மாற்றுப் பாதையில், இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை ரோடு ஷோ நடத்திக் கொள்ள அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

அடாத மழையிலும் விடாது டாஸ்மார்க் நோக்கி படையெடுக்கும் குடிமகன்கள்..

1 of 927

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்