Rock Fort Times
Online News

காதல் விவகாரத்தில் பெயிண்டரை கொலை செய்த விவசாயிக்கு 5 ஆண்டு சிறை…!

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள மேலவாளாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (35). பெயிண்டர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு, மேலவாளாடி ரயில்வே மேம்பாலம் அருகே மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து சமயபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், மேலவாளாடி அருகேயுள்ள புதுக்குடியைச் சேர்ந்த விவசாயி கனகராஜ் அக்காவை பிரபாகரன் காதலித்து வந்தாராம். ஆனால் பின்னர் அவர் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவரது அக்காவுக்கும் வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது. தனது சகோதரியை காதலித்து ஏமாற்றிவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் பிரபாகரன் மீது கனகராஜ் ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில்தான் கடந்த 2018ம் ஆண்டு பிரபாகரனை, கனகராஜ் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து கனகராஜை கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி மாவட்ட 2வது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பளிக்கப்பட்டது. கொலைக்குற்றம் உறுதி செய்யப்பட்டாலும், ஆயுதங்களை கொண்டோ அல்லது மரணத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் குற்றவாளி தாக்கவில்லை. அடித்ததில் எதிர்பாராமல் பிரபாகரன் இறந்திருக்கலாம் என விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. அதன்பேரில், கனகராஜுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி பி.சரவணன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் ஆஜரானார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்