திருச்சி, காந்தி மார்க்கெட் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் விபத்தில் பலி- * தனியார் பஸ்களின் அஜாக்கிரதையால் தொடரும் விபத்துக்கள்!
திருச்சி, வடக்கு தாராநல்லூர் வீரம்மாள் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சாந்தி (வயது 53). கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் இன்று(18-03-2025) காலை காந்தி மார்க்கெட் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். மகளிர் சிறை முன்பு சென்றபோது பின்னால் வந்த தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சாந்தி நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அந்த பேருந்தின் பின் சக்கரம் அவர் உடல் மீது ஏறியது. இதில் சாந்தி உடல் நசுங்கி பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து விபத்தை நேரில் பார்த்த சிலர் கூறுகையில், திருச்சி சிட்டி பகுதியில் இயக்கப்படும் சில தனியார் பேருந்துகள் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்காமல் பேருந்தை வேகமாக இயக்குவதும், ஒரு பேருந்து முன்னே சென்றால் அந்தப் பேருந்தை பின்னாடியே விரட்டிச் செல்வதும் தொடர் கதையாக இருக்கிறது. மேலும், அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் இல்லை என்பதால் இவர்களுக்கு கலெக்க்ஷன் வெகுவாக குறைந்துவிட்டது. ஆகவே, கலெக்க்ஷன் போட்டியில் தனியார் பேருந்துகளை அதன் ஓட்டுனர்கள் வேகமாக இயக்குகிறார்கள். அப்போது அவர்கள் அஜாக்கிரதையாக பேருந்துகளை இயக்குவதால் இது போன்ற சாலை விபத்துக்கள் ஏற்பட்டு விலை மதிப்பற்ற உயிர்கள் பறிபோய் விடுகின்றன. இதுபோல பல விபத்துக்கள் ஏற்பட்டு இருக்கின்றன. ஆகவே, திருச்சி சிட்டி பகுதியில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.
Comments are closed.