திருச்சி உறையூரை சேர்ந்த பிரசன்ன குமார் என்பவரது மனைவி திவ்யா. மருத்துவரான இவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் தொலைபேசியில் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தன் பெயர் வினோத்குமார் சௌபே எனவும், மும்பையில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருவதாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், உங்கள் பெயரில் சிம்கார்டு ஒன்று வாங்கி அதன் மூலம் 25 பெண்களின் ஆபாச புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மும்பை சாண்டா குரூஸ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே வழக்கு விசாரணைக்காக இரண்டு மணி நேரத்தில் மும்பை வருமாறும் அவ்வாறு வரவில்லை என்றால் சிம் கார்டு மற்றும் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு விடும் என எச்சரித்துள்ளார். தொடர்ந்து மற்றொரு என்ற எண்ணிலிருந்து வாட்ஸ்அஃப் காலில் திவ்யாவிடம் பேசிய நபர், உங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி மும்பை கனரா வங்கியில் புதிய வங்கிக் கணக்கு துவக்கப்பட்டுள்ளது. அந்த வங்கிக் கணக்கு மூலம் ராஜ் குந்த்ராவிற்கு 6 கோடி ரூபாய் பண பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். திவ்யா ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் நிலுவையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.எனவே சிக்கல்களில் இருந்து வெளிவர பாதுகாப்புத் தொகையாக ரூ.11 லட்சத்தை ரிசர்வ் வங்கிக் கணக்கிற்கு மாற்றுமாறு திவ்யாவிற்கு தெரிவித்தார். அதை நம்பிய திவ்யா தனது வங்கி கணக்கிலிருந்து 11 லட்சத்தை அனுப்பி வைத்தார். இதனை தொடர்ந்து மீண்டும் அந்த செல்போனை தொடர்பு கொண்ட போது அந்த அந்த செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த திவ்யா இதுகுறித்து திருச்சி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments are closed.