Rock Fort Times
Online News

அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல்…!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சிகள், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.  இது ஒருபுறம் இருக்க நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க.சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது. அதிமுக சார்பில் போட்டியிட மொத்தம் 2,475 பேர் விருப்ப மனுக்களை சமர்ப்பித்திருந்தனர். அவர்களிடம் இன்றும்(10-03-2024) நாளையும் நேர்காணல் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் திருவள்ளூர், சென்னை வடக்கு, சென்னை தெற்கு, மத்திய சென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 10 தொகுதிகளுக்கும், பிற்பகலில் திருவண்ணாமலை, ஆரணி, கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடத்தப்பட்ட இந்த நேர்காணலில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், கே.பி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் மற்றும் பலர் பங்கேற்றனர். அப்போது அவர்கள், தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவ ர்களிடம் கட்சியில் எத்தனை ஆண்டு அனுபவம், கட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் பங்கேற்றது உண்டா?, படிப்பு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டால் எவ்வாறு பணி ஆற்றுவீர்கள், தொகுதி நிலவரம் எப்படி ? என்பன போன்ற முக்கிய கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. நாளை 11ம் தேதி பொள்ளாச்சி, திண்டுக்கல், கரூர், புதுச்சேரி உள்ளிட்ட 20 தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் காலை, மாலை நேர்காணல் நடத்தப்படுகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்