Rock Fort Times
Online News

திருச்சியில் மளிகை கடை உரிமையாளரை முட்டித் தூக்கிய மாடு- பதை, பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!

திருச்சி மாநகராட்சி பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் மாடுகள் மற்றும் குதிரைகள், நாய்கள் இரவு பகல் பாராது சர்வ சாதாரணமாக சுற்றி திரிகின்றன. அவைகள் திடீரென சாலையின் குறுக்கே ஓடும்போது வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுந்து ரத்த காயம் அடைகின்றனர். ஒரு சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்பட்டு விடுகின்றன. அப்படி ஒரு சம்பவம் மாநகர பகுதியில் மீண்டும் அரங்கேறி உள்ளது. மாநகராட்சி மூன்றாவது கோட்டத்திற்கு உட்பட்ட 42- வது வார்டு பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் ஒருவர் தனது கடை முன்பு இரவு வேலையில் துணியை வைத்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சாலையில் சுற்றித்திரிந்த ஒரு மாடு திடீரென அவரை முட்டி தூக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாலையில் திரியும் கால்நடைகளை மாநகராட்சி ஊழியர்கள் அவ்வப்போது பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். இருந்தாலும் சாலையில் கால்நடைகள் சுற்றி திரிந்த வண்ணம் தான் இருக்கின்றன. இது போன்ற சம்பவம் இனியும் நடக்காதவாறு மாநகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்