திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கண்ணுடையான்பட்டியைச் சேர்ந்தவர் ரகுபதி (வயது 45). பழைய இரும்பு, பேப்பர், அட்டை போன்ற பொருட்களை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று ( 02.10.2023 ) திருச்சி சென்று அங்கு பழைய இரும்பு பொருட்களை வாங்கி சரக்கு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு கண்ணுடையான்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். கரையாம்பட்டி என்ற இடத்தில் வந்தபோது ஆட்டோவின் பின்னால் புகை வருவதை கண்ட ரகுபதி, ஆட்டோவை சாலையோரம் நிறுத்திவிட்டு பார்த்தபோது தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் ஆட்டோ முழுவதும் தீ பற்றி எரிய தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த மணப்பாறை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் ஆட்டோவின் பெரும் பகுதி சேதமடைந்தது. சரக்கு ஆட்டோவின் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ பற்றி இருக்கலாம் எனவும், ஆட்டோவில் பழைய டயர், பேப்பர், அட்டை போன்ற பொருட்கள் இருந்ததால் தீ வேகமாக பற்றியதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.