திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள அன்பில் குறிச்சி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் கரிகாலன்( வயது 48). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர், முசிறி தாலுகாவில் ஊராட்சி செயலராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று ( 23.06.2023 ) இரவு பணிகளை முடித்துவிட்டு நம்பர் 1 டோல்கேட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது லால்குடியில் இருந்து சத்திரம் பஸ் நிலையம் நோக்கி அரசு நகர பஸ் ஒன்று எதிரே வந்து கொண்டிருந்தது. திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் செம்பழனி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியது.
இந்த விபத்தில் கரிகாலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கரிகாலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Post

Comments are closed, but trackbacks and pingbacks are open.