அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் கடந்த மாதம் வருமான வரித்துறை சோதனை நடந்தது. சென்னை, கரூர், கோவை, ஈரோடு ஆகிய இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. கரூரில் மட்டுமே வருமான வரித்துறை சோதனை 8 நாட்கள் நீடித்தது. சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர், உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர். பின்னர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தநிலையில், கரூரில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கரூர்- ஈரோடு சாலை கோதை நகர் பகுதியில் உள்ள சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்திக் வீடு மற்றும் செந்தில் பாலாஜி உறவினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 5 வாகனங்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், 20-க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதம் வருமான வரித்துறையினர் சோதனையின் போது சீல் வைக்கப்பட்ட இடங்களில் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். 

Comments are closed, but trackbacks and pingbacks are open.