மண்ணச்சநல்லூர் தொகுதி மக்களின் 30 ஆண்டுகால கனவில் மண் அள்ளிப்போட்ட மின்சாரத்துறை…* கிடப்பில் கிடக்கும் துணை மின்நிலைய பணிகளால் தொகுதிவாசிகள் கொதிப்பு!
திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளில் முக்கியமானது மண்ணச்சநல்லூர். பெரும்பாலும் கிராமப்புறப்பகுதிகளை உள்ளடக்கிய இத்தொகுதியில், விவசாயம் மற்றும் அதுசார்ந்த தொழில்களிலேயே பெரும்பாலானோர் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், மண்ணச்சநல்லூர் பகுதியில் மட்டும் சுமார் 50க்கும் அதிகமான அரிசி ஆலைகளும் இயங்கி வருகின்றன. இங்கிருந்து உற்பத்தியாகும் மண்ணச்சநல்லூர் பொன்னிக்கு, திருச்சி மாவட்டம் மட்டுமில்லாமல் தமிழக அளவில் நல்ல மவுசு உள்ளது. ஆனால், இப்பகுதியில் நிலவும் மின்பற்றாகுறையால் அரிசி உற்பத்தி தொழில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதோடு, நாளுக்கு நாள் பெருகிவரும் மக்கள்தொகை பெருக்கத்தால் மின்தடையும் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே, மண்ணச்சநல்லூர் தொகுதியில் மின்பற்றாக்குறையை சரிசெய்ய வசதியாக மண்ணச்சநல்லூர் மற்றும் திருப்பைஞ்ஞீலி ஆகிய 2 இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்கிற தங்களின் 30 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு மண்ணச்சநல்லூர் தொகுதி எம்.எல்.ஏவான சீ.கதிரவனிடம் தொகுதி மக்களும், வியாபாரிகளும் 2024ம் ஆண்டு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கடந்த திமுக ஆட்சியில் மண்ணச்சநல்லூர் – சமயபுரம் சாலையில் அரசு பஸ் டெப்போ அருகேயுள்ள பேரூராட்சிக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் இடத்தில் ரூ.110 கோடியிலும், அதேபோல திருப்பைஞ்சீலியீல் ரூ.47 கோடியிலும் என மொத்தம் 2 துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கான திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அரசு ஒப்புதல் பெறப்பட்டு, நிதி ஒதுக்கி, டெண்டரும் விடப்பட்டது.
இதனால் தங்களின் பல ஆண்டு கோரிக்கை நிறவேற்றப்பட்ட சந்தோஷத்தில் இப்பகுதி மக்கள் துள்ளி குதித்து கொண்டாடியதோடு, தங்களின் பல்லாண்டு கனவை நினைவாக்கித் தந்த இத்தொகுதி எம்.எல்.ஏவான கதிரவனை தோளில் தூக்கி வைத்து கொண்டாடினர். இதற்கிடையே, 2026 சட்டமன்ற தேர்தல் வரவும், துணை மின்நிலையம் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில், தற்போதைய த.வெ.க ஆட்சியில் மண்ணச்சநல்லூரில் துணை மின்நிலையம் அமைப்பதற்காக அரசு ஒப்புதல் பெறப்பட்டு நிதி ஒதுக்கியப்பிறகும் ஆரம்ப கட்ட பணிகள் கூட தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், மண்ணச்சநல்லூர் பகுதி மக்கள் கொதிப்பில் உள்ளனர். இதுகுறித்து துறைசார்ந்த அதிகாரிகளிடம் நாம் பேசினோம்., அப்போது அவர்கள் தெரிவித்ததாவது.,” மண்ணச்சநல்லூர் மற்றும் திருப்பைஞ்ஞீலியில் துணை மின் நிலையங்கள் அமைப்பதில் எந்த தொய்வும் ஏற்படவில்லை. மண்ணச்சநல்லூரில் துணைமின்நிலையம் அமையவுள்ள இடம் பேரூராட்சிக்கு சொந்தமானது. இதை மின்சாரத்துறையிடம் ஒப்படைத்ததில் ரூ.4 லட்சம் செலுத்தப்படாமல் இருந்தது. இதனால் பணிகளை துவங்குவதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. தற்போது அந்த தொகையும் செலுத்தப்பட்டு விட்டது. துணைமின்நிலையம் அமையவுள்ள பகுதியில் “பயோ மைனிங்” முறையில் குப்பைகளை அகற்றுவதற்காக கடந்த திமுக ஆட்சியில் டெண்டர் விடப்பட்டது. டெண்டருக்கான காலக்கெடு முடிவடைந்த பிறகும் ஒப்பந்ததாரர் பணிகளை துவங்காததால் அந்த ‘பயோ மைனிங்” டெண்டர் மட்டும் அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளது. மற்றபடி அனைத்து பணிகளும் வேகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. துணை மின்நிலையங்களை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரத் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்” என்றனர்.

Comments are closed.