சிறுமிகள் பாலியல் வழக்கு: கிரானைட் உரிமையாளரை போக்சோவில் கைது செய்யாமல் இருக்க ரூ.10 கோடி கைமாறியதா? விசாரணை நடத்த குழு அமைத்தது தமிழ்நாடு அரசு..!
ஜெம் கிரானைட்ஸ்’ உரிமையாளர் வீரமணி (வயது 84). பிரபல தொழிலதிபரான இவர், பல சிறுமிகளிடம் பாலியல் உறவில் ஈடுபட்ட ‘வீடியோ’ ஒன்று தன்னார்வலர் ஒருவர் மூலம் போலீசார் கையில் சிக்கியது. அந்த ’பென்டிரைவ்’வில் இருந்த வீடியோ காட்சியை விபசார தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர். இதில் தொழில் அதிபர் வீரமணி, பல சிறுமிகளுடன் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு விபசார தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆசிரமங்கள் தொடங்கி ஏழை மாணவிகளுக்கு படிக்க நிதி உதவி செய்து இச்சைக்கு பயன்படுத்தியதும், 100 சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை சீரழித்ததும், உல்லாசத்துக்காக போயஸ் கார்டனில் மாதம் ரூ.2 லட்சம் வாடகையில் பங்களா வீட்டை வாடகைக்கு எடுத்ததும் தெரியவந்தது. அவருக்கு சிறுமிகளை சப்ளை செய்ததாக சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு பின்னர் 3 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
முதல்வர் விஜய் உத்தரவு:
கிரானைட் உரிமையாளர் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். வீரமணி மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில், குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது என்றும், வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் உத்தரவையடுத்து கிரானைட் உரிமையாளர் வீரமணி மீதான பாலியல் வழக்கில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக விபசார தடுப்பு பிரிவில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ரூ.10 கோடி கைமாறியதா?
இந்த நிலையில், ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணியை போக்ஸோ வழக்கில் கைது செய்யாமல் இருக்க ரூ.10 கோடி பணம் கைமாறியதாக கூறப்படுகிறது. இந்த பணப்பரிவர்த்தனை தொடர்பாக விசாரிக்க கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர் தலைமையில் குழு அமைத்து சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். யார் யாருக்கு பணம் சென்றது, காவல் அதிகாரிகள் பணம் பெற்றார்களா? என இந்தக் குழு விசாரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.