அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குறைபாடுகள் குறித்த புகார்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் “உழவர் உதவி மைய வாட்ஸ்ஆப் எண்ணில்” புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், நடப்பு கொள்முதல் பருவம் 2026–2027-க்கு மத்திய அரசால் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டதன் அடிப்படையில், தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு முதல்வர் விஜய் சட்டமன்ற பேரவை விதி 110–ன் கீழ் நெல்லுக்கான ஊக்கத் தொகையாக சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.156-லிருந்து ரூ.289-ஆகவும், பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.131 லிருந்து ரூ.159- ஆகவும் உயர்த்தி வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, நடப்பு கொள்முதல் பருவம் 2026-2027-ல் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் செப்.1 முதல் கொள்முதல் பருவம் தொடங்கப்பட்டு செப்.3 முதல் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதல் திட்டத்தினை வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புணர்வுடனும் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து செயல்படுத்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய அரசாணை செப்.15- ல் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. நடப்பு கொள்முதல் பருவம் 2026-2027-ல் சன்னரகம் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2750- க்கும் பொதுரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2600-க்கும் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் செப்.3 முதல் 20,196 விவசாயிகளிடமிருந்து 1.17 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் எவ்வித சிரமங்களின்றி தங்களது நெல்லினை விற்பனை செய்திடவும் அவ்வாறு விற்பனை செய்திடும்போது கொள்முதல் நிலையங்களில் உள்ள குறைபாடுகள் பற்றியோ அல்லது பணம் வசூலிப்பதைப் பற்றியோ புகார் தெரிவிக்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் “உழவர் உதவி மைய வாட்ஸ்ஆப் எண். 95008 01465-ல்” புகார் அளிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed.