தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று (21.09.2026) தலைமைச் செயலகத்தில், “வெற்றிப் பயணம்” திட்டத்தின் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் வாக்குறுதியாக அளித்த பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் குறித்த ஆலோசனைகள் நடத்தப்பட்டு, சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்த வெற்றிப் பயணத் திட்டத்தை முதல்வர் விஜய் வருகிற அக்டோபர்
2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தொடங்கி வைக்கவுள்ளார். தற்போது, 7 அரசு போக்குவரத்துக் கழகங்களின் நகர சாதாரணப் பேருந்துகள் மற்றும் 40 கி.மீ. வரையிலான மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றிப் பயணம் செய்து வருகின்றனர். “வெற்றிப் பயணம்” திட்டத்தின் மூலம் இச்சேவை மாநகர, நகர்ப்பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் அரசுப் பேருந்துகள், புறநகர் சாதாரணப் பேருந்துகள் மற்றும் 40 கி.மீ.க்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகள் ஆகியவற்றிற்கும் விரிவுபடுத்தப்பட்டு, மொத்தமாக 12,692 பேருந்துகள் இத்திட்டத்தின்கீழ் கொண்டு வரப்படவுள்ளன.
நாளொன்றுக்கு சுமார் 84.32 லட்சம் மகளிர் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள். இத்திட்டத்தின் மூலம், மாநிலம் முழுவதும் மாணவிகள் தொலைதூரத்தில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்லவும், மகளிர் தங்கள் பணியிடங்களுக்குச் செல்லவும், மருத்துவம் மற்றும் அத்தியாவசியச் சேவைகளுக்கும் கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்க இயலும்.

Comments are closed.