பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த தமிழ் மாதமாக புரட்டாசி மாதம் போற்றப்படுகிறது. அதிலும் இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாள் ஆகும். இதனால் தீவிர பக்தர்கள் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வணங்கி வழிபடுவது வழக்கம். பொதுவாக புரட்டாசி மாதத்தில் வைணவ கோவில்கள் மற்றும் பிற கோவில்களில் உள்ள பெருமாள் சன்னதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும். புரட்டாசி சனிக்கிழமைகளில் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த ஆண்டு புரட்டாசி மாதம் நேற்று பிறந்தது. இன்று( செப்.19) புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பகவானை தரிசனம் செய்கின்றனர். அந்த வகையில் உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் அதிகாலை
முதலே பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில்
நின்று பெருமாளை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வெண்பொங்கல் பிரசாதமாக
வழங்கப்பட்டது. வரிசையில் நிற்க முடியாத வயதான பக்தர்கள் வசதிக்காக இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும் குடிநீர்
உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு இருந்தன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அறநிலையத்துறை சார்பில் கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் தலைமையில் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தன.

Comments are closed.