உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று(17-09-2026) கோலாகலமாக நடைபெற்றது. தீ விபத்தில் சேதம் அடைந்த வீர வசந்தராயர் மண்டபம் புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. யாகசாலை பூஜைக்காக வடக்கு வீதியில் 184 குண்டங்களுடன் மிகப்பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டது. தங்க குடங்களும் யாகசாலையில் வைக்கப்பட்டன. கங்கை, யமுனை, காவிரி, வைகை உள்ளிட்ட பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை கலசங்களில் நிரப்பி யாகசாலையில் வைத்து தினமும் பூஜைகள் நடந்தன. கடந்த 11ம் தேதி அன்று முதல் கால யாக பூஜைகள் தொடங்கிய நிலையில் நேற்று அதிகாலை 3.45 மணி அளவில் பத்தாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. அந்த வழிபாடு நிறைவு பெற்ற பிறகு பரிவார தெய்வங்களுக்கான கும்பாபிஷேகம் தொடங்கியது. யாகசாலையில் இருந்து புனித நீர் கலசங்கள் புறப்பாடாகி கோவிலுக்குள் உள்ள பரிவார தெய்வங்கள் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டன.
காலை 5 மணி முதல் 6 மணிக்குள் சித்தி விநாயகர், கூடல் குமாரர், தட்சிணாமூர்த்தி துர்க்கை, மகாலட்சுமி, பத்திரகாளி,
63 நாயன்மார்கள், நவகிரகங்கள் உள்பட 414 பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மூலவர் மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் தங்க விமானங்கள், சந்நிதி விமானங்கள், 12 கோபுரங்கள் உள்ளிட்டவர்களுக்கான கலசங்களுக்கு நேற்று மாலை பதினோராம் காலை யாகசாலை பூஜைகள் நடந்தன. சிகர நிகழ்ச்சியாக இன்று மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக இன்று அதிகாலை 3-45 மணிக்கு 12ம் கால பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரால் காலை 7-40 மணிக்கு கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்பு மூலவர் மீனாட்சி அம்மனுக்கு காலை 8 -10 மணிக்கும், சுந்தரேஸ்வரருக்கு 8-50 மணிக்கும் புனித நீரால் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை காண தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர்.
அவர்கள் பயபக்தியுடன் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவில் தமிழக அமைச்சர்கள் நிர்மல்குமார், ரமேஷ் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள், கோவில் நிர்வாகிகள், காவல்துறை அதிகாரிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 17 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.