மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக சார்பில் களமிறங்கும் 40 நட்சத்திர பேச்சாளர்கள்…* எஸ்.பி.வேலுமணி சி.வி.சண்முகம் ‘மிஸ்ஸிங்’..!
தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளிலும் அடுத்த மாதம்( அக்டோபர்) 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 2 தொகுதிகளிலும் த.வெ.க., தி.மு.க. அ.திமு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இதன்மூலம் இடைத்தேர்தலில் 5 முனைப்போட்டி நிலவுகிறது. மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. வேட்பாளராக பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஜானகிராமன் ஆகியோர் களம் இறங்கி உள்ளனர். தாராபுரத்தில் த.வெ.க. சார்பில் சத்தியபாமா, தி.மு.க. வேட்பாளராக சுகன்யா, அ.தி.மு.க. சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் வேட்பாளராக கார்த்திகா ஆகியோரும் போட்டியிடுகிறார்கள். 2 தொகுதிகளிலும் போட்டியிடுபவர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து வருகிற 20-ந்தேதிக்கு பிறகு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்து இருக்கிறார்கள். இந்த நிலையில், இடைத்தேர்தலில் நட்சத்திர பேச்சாளர்களாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 40 பேரின் பெயர் பட்டியலையும், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் 20 பேரின் பெயர் பட்டியலையும் தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் அதிமுக நட்சத்திர பேச்சாளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கேபி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தம்பிதுரை, பொள்ளாச்சி ஜெயராமன், வளர்மதி, ஓ.எஸ்.மணியன், காமராஜ் உள்ளிட்ட 40 நட்சத்திர பேச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆனால், அந்த பட்டியலில் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி பெயர்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.