ரூ.48 லட்சம் வழங்கப்பட்டுள்ளது: மாணவர் பாரதிதாசன் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்புகிறார்…* சமூக நீதித்துறை விளக்கம்…!
மலேசிய நாட்டில் முனைவர் பட்ட ஆய்வு(பி.எச்.டி) மேற்கொண்டு வரும் பாரதிதாசன் என்ற மாணவருக்கு அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் இரண்டாம் ஆண்டு படிப்பிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என ‘எக்ஸ்’ தளத்தில் வெளியான வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து சமூக நீதித்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
வெளிநாடுகளில் சென்று உயர்கல்வி/ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிருத்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு தமிழக அரசு சமூக நீதி துறையால் அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் ஒரு மாணவருக்கு கல்வி நிறுவனத்திற்கு செலுத்தும் கட்டணம் மற்றும் அவர் வெளிநாட்டில் வாழ்க்கை செலவினம் மற்றும் இதர செலவினங்கள் ஆகியவை சேர்த்து அதிகபட்சமாக ஆண்டிற்கு ரூ.36 லட்சம் வரை வழங்கப்படுகிறது. மாணவர் பாரதிதாசன் என்பவர் மலேசிய நாட்டில் உள்ள தேசிய பல்கலைகழகத்தில் படிப்பதற்காக அண்ணல் அம்பேத்கர் 1 அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் 2025-2026 ம் ஆண்டு முதல் மொத்தம் மூன்றாண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை ஆண்டிற்கு ரூ. 36 லட்சம் வரை வழங்கிட ஒப்புதல் அளித்து ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரால் பரிந்துரை கடிதம் 2025ம் ஆண்டில் வழங்கப்பட்டது.
இதன் அடிப்படையில் முதலாம் கல்வி ஆண்டான 2025-2026 இல் அம்மாணவரின் பி.எச்.டி படிப்புக்கு மொத்தம் ரூ.36 லட்சம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இதில் கல்விக்கட்டணம் ரூ.5,01,638/-பல்கலைக்கழகத்தின் வங்கிக்கணக்கிற்கும் மீதமுள்ள தொகை ரூ.30,98,362/- மாணவரது வங்கிக் கணக்கிற்கும் நேரடியாக வழங்கப்பட்டுள்ளது. அத்தொகையில் விசா/விமானக் கட்டணம் தவிர மாணவரது ஆராய்ச்சி மற்றும் வாழ்க்கை செலவினங்களுக்காக பெற்ற தொகை ரூ27,40,140/- க்கான செலவுப்பட்டியல் சமர்ப்பிக்குமாறு மாணவரிடம் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், பாரதிதாசனின் செலவின கோரிக்கை ரூ.19.50 லட்சம் தொடர்பாக, பரிந்துரைத்து அனுப்பும்படி தெரிவித்து, அவர் படிக்கும் பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் கடிதம் 17-ந் தேதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் நகல் அந்த மாணவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. பல்கலைக்கழகத்திடம் இருந்து பதில் கிடைத்ததும் கல்வி உதவித் தொகை விடுவிக்கப்படும். இந்தத் தகவலும் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவருக்கு இதுவரையில் முதலாமாண்டு படிப்பிற்கு ரூ.36 லட்சம் மற்றும் 2-ம் ஆண்டிற்கு ரூ.12 லட்சம் என மொத்தம் ரூ.48 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவர் பாரதிதாசன் சமூகவலைதளத்தில் காணொளி ஒன்றை பதிவுசெய்து, உண்மைக்கு மாறான தகவல்களை பதிவு செய்துள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.