சென்னை, பரந்தூரில் புதிய விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை 2 நாள் விடுமுறைக்குப் பிறகு கூடியதும், மறைந்த நடிகை சௌகார் ஜானகிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் பேசுகையில், “சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையம் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தால் இயக்கப்படுகிறது. இது இப்போது ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக உள்ளது. வளர்ந்து வரும் சென்னை மாநகரின் தேவைகள், தொழில் வளர்ச்சி மற்றும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டும் சரக்கு போக்குவரத்தை அதிகரிக்கும் வகையிலும் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான தேவை ஏற்பட்டுள்ளது. புதிய விமான நிலையத்தை அமைப்பதற்காக தேர்வு செய்யப்படும் இடம் பெரியளவில் விவசாயிகளை சந்திக்காத வகையிலும் அதிகளவில் குடியிருப்புகளை அகற்றாத வகையிலும் அமைய வேண்டும்.
ஆனால், முந்தைய அரசு விவசாயிகளை அதிகம் பாதிக்கும் வகையிலும் குடியிருப்புகளை அகற்றும் வகையிலும் புதிய விமான நிலையத்தை அமைக்க முயற்சிகளை மேற்கொண்டது. இதனை எதிர்த்து ஏகனாபுரம் மற்றும் பிற கிராம மக்கள் நடத்திய போராட்டங்களை அறிந்து நான் 20-01-2026 அன்று அப்பகுதிக்குச் சென்று அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு அவர்களுடன் முதல் ஆளாக நான் நிற்பேன் என்று கூறினேன். மக்கள் மத்தியில் நான் அன்றே தெரிவித்ததை நிறைவேற்றும் பொருட்டு துறை அதிகாரிகளிடமும் வல்லுநர்களிடமும் விரிவாக ஆலோசனை நடத்தினேன். நான் ஏற்கனவே உறுதியளித்தபடி, பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் இந்த அரசால் கைவிடப்படும்
என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். இந்த அறிவிப்பினை கேட்டு பரந்தூர் பகுதி மக்கள் சந்தோஷத்தில் துள்ளி குதித்தனர்.

Comments are closed.