நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) எம்.பி.க்கள் தனித்தனியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தின் போது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்படும் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் மீது காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தியும் பங்கேற்றார்.
இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் முன்பு நடைபெற்ற போராட்டத்தை கண்டித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) எம்.பி.க்களும் நாடாளுமன்ற வளாகத்தில் தனியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் எதிரெதிரே போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

Comments are closed.