Rock Fort Times
Online News

திருச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு … நள்ளிரவில் மூதாட்டியின் கால் விரலை கடித்து குதறிய எலிகள்…

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டியின் கால் விரலை எலி கடித்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், கல்கண்டார்கோட்டை அருகே ஆலந்தூரைச் சேர்ந்த தமிழ்க்கொடி (68) என்பவர், கால் எலும்பு முறிவு காரணமாக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, சாதாரண வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், காலில் கட்டுடன் வார்டில் உறங்கிக் கொண்டிருந்த தமிழ்க்கொடியின் கால் விரலை (ஜூலை 22) நள்ளிரவு நேரத்தில் எலி கடித்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். உடனடியாக மருத்துவக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விரைந்து வந்து மூதாட்டியைப் பரிசோதித்து தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்பட்டது . இதனால் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட மூதாட்டியின் மகன் கூறுகையில், அரசு மருத்துவமனை முறையாகப் பராமரிக்கப்படவில்லை. எனது தாய் சர்க்கரை நோயாளி என்பதால், அவரது காலில் எலி கடித்தது. அவருக்கு உடனடியாக அது தெரியவில்லை. தற்போது அவரது கட்டை விரலைச் சுற்றி மருத்துவர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் முழுப் பொறுப்பேற்று,  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ விளக்கம் இதுவரை வெளியாகவில்லை.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்