Rock Fort Times
Online News

ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருச்சி, ஸ்ரீரங்கம் வழியாக திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில்…! முன்பதிவு இன்று தொடக்கம் !

ஓணம் பண்டிகை கேரளம் மக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையாகும். அதன்படி, இந்த வருடம் ஆகஸ்ட் 16ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 29 வரை ஓணம் திருவிழா கேரள மாநிலத்தில் கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு, தெற்கு ரயில்வே மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்கள் வழியாக திருவனந்தபுரம் வரை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதன்படி, ஓணம் திருவிழாவை முன்னிட்டு சொந்த ஊருக்குத் திரும்பும் பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டும், கூட்ட நெரிசலை சமாளிப்பதற்கும், திருவனந்தபுரம் சென்ட்ரல் – தாம்பரம் விரைவு சிறப்பு ரயில் (வண்டி எண் 06110) அறிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து ஆகஸ்ட் 12, 19, 26 மற்றும் செப்டம்பர் 2ம் தேதிகளில் ஒவ்வொரு புதன்கிழமை அன்றும், பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் வியாழக்கிழமைகளில் காலை 10 மணியளவில் தாம்பரம் சென்றடையும்.

மறுமார்க்கத்தில், தாம்பரம் – திருவனந்தபுரம் சென்ட்ரல் விரைவு சிறப்பு ரயில் (வண்டி எண் 06109) தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து, ஆகஸ்ட் 13, 20, 27 மற்றும் செப்டம்பர் 3ம் தேதிகளில் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் பிற்பகல் 2 மணியளவில் புறப்பட்டு, மறுநாள் வெள்ளிக்கிழமைகளில் காலை 7.15 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரலை சென்றடையும். இந்த ரயில்களில் இரண்டடுக்கு குளிர்சாதனப் பெட்டிகள் 2, மூன்றடுக்கு குளிர்சாதனப் பெட்டிகள் 8, படுக்கை வசதி கொண்ட 2ம் வகுப்புப் பெட்டிகள் 6, பொதுப்பெட்டிகள் மற்றும் சரக்குப் பெட்டிகள் 6 என மொத்தம் 24 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இரு மார்க்கங்களிலும் மேற்கண்ட ரயில்கள் வர்கலா, கொல்லம், கொட்டாரக்கரா, அவுனேஸ்வரம், புனலூர், செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, கொடை ரோடு, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மேற்கண்ட ரயில்களுக்கான முன்பதிவு இன்று (ஜூலை 9) தொடங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்