அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் மீது தொடரப்பட்ட கட்சித் தாவல் புகார் தொடர்பாக, பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் மீதான கட்சித் தாவல் புகார் தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ளது. அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்களான மரகதம் குமரவேல், எஸ். ஜெயக்குமார், பி. சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு, முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இதையடுத்து, கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்டு பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதன்படி, முன்னாள் எம்எல்ஏக்களான மரகதம் குமரவேல், எஸ். ஜெயக்குமார் மற்றும் பி. சத்யபாமா ஆகியோர் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் முன்பு நேரில் ஆஜராகி தங்களது விளக்கத்தை அளித்தனர். இதற்கிடையில், அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோரும் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.