Rock Fort Times
Online News

கல்வி நிறுவனங்களில் முதல்வர் விஜய் பிறந்த நாள் கொண்டாட்டம்: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு..!

பள்ளி, கல்லூரிகளில் த.வெ.க. தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலரும், வழக்கறிஞருமான கவிகணேசன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கடந்த 22-ம் தேதி த.வெ.க. தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கட்சியினர் கட்சிக் கொடி மற்றும் சின்னங்களுடன் நிகழ்ச்சிகளை நடத்தியதாகக் கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சிகளின் போது மாணவர்களை பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் பாடவும், கோஷம் எழுப்பவும் செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் த.வெ.க. தலைவரின் முக வடிவில் 3,000 மாணவர்களை வெயிலில் அமர வைத்துள்ளனர். மாணவர்களை அரசியல் கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்துவது கல்வி நிறுவனங்களின் நோக்கத்துக்கு எதிரானது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களில் அரசியல் மற்றும் மதச் சித்தாந்தம் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என தமிழக அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கல்வி நிறுவனங்களில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்த அரசாணையை கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும், அரசியல் கொண்டாட்டங்கள் நடத்தியது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, கல்வி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் மற்றும் ஊழியர்களை தற்காலிகப் பணிநீக்கம் செய்து, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்