Rock Fort Times
Online News

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது…!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அனிதா ராதாகிருஷ்ணன். கடந்த முறையும் வெற்றி பெற்ற இவர், திமுக அமைச்சரவையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் மு.க.ஸ்டாலின் தோற்றதால் அந்த தொகுதி மக்களை கடுமையாக திட்டி பேசினார். அதோடு முதல்வர் விஜய் குறித்தும், அவரது கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் அவ்வப்போது கடுமையாக சாடி வந்தார். தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரில் கடந்த மாதம் 20ம் தேதி நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அனிதா ராதாகிருஷ்ணன், முதல்-அமைச்சர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறாகவும், சர்ச்சைக்குரிய வகையிலும் கருத்துகளை தெரிவித்தார். மேலும், சட்டசபையில் முதல்வர் விஜய் அமர்ந்திருக்கும் விதம் குறித்தும் விமர்சித்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தவெக நிர்வாகிகள் ஆத்தூர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால், தான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்பதை அறிந்த அனிதா ராதாகிருஷ்ணன், முன் ஜாமீன்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று(03-07-2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஏன் இதுபோல பேச வேண்டும்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி
செய்து உத்தரவிட்டார். முன்ஜாமீன் மனு தள்ளுபடியான நிலையில், அனிதா ராதா கிருஷ்ணனை ஆத்தூர் போலீசார் கைது செய்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்