மருத்துவ படிப்பில் சேர நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. வினாத்தாள் கசிவால் அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் வருகிற ஜூன் 21 அன்று மறு நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் நீட் மறுதேர்வை முன்னிட்டு, வினாத்தாள் கசிவு மற்றும் மோசடிகளைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. இந்த தற்காலிகத் தடை வரும் ஜூன் 22 ம் தேதி வரை இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக டெலிகிராமில் ஏற்கனவே பதிவிட்ட செய்திகளைத் திருத்தும் வசதி ஜூன் 30 ம் தேதி வரை முடக்கப்பட்டுள்ளது. கடந்த மே மூன்றாம் தேதி நடந்து, பின்னர் வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வைப் போலவே, ஜூன் 21ம் தேதி நடைபெறும் மறுதேர்வுக்கான வினாத்தாள்களும் தங்களிடம் இருப்பதாகக் கூறி சில மோசடி கும்பல்கள் டெலிகிராம் சேனல்கள் மூலம் மாணவர்களிடம் பணம் பறித்து ஏமாற்றி வந்தனர். சமீபத்தில் 1.50 கோடி ரூபாய் வரை மோசடி செய்த ராஜஸ்தானைச் சேர்ந்த இருவர் அகமதாபாத் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். தேர்வு முடிந்த பிறகு, டெலிகிராமில் உள்ள பழைய மெசேஜ்களை எடிட் செய்து, “நாங்கள் தேர்வுக்கு முன்பே வினாத்தாளை கசியவிட்டுவிட்டோம்” என்று போலியான ஆதாரங்களை உருவாக்கி வதந்திகளைப் பரப்புவதற்கு இந்த ஆப்பின் எடிட்டிங் அம்சம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவு வதந்திகள், போலியான செய்திகள் மற்றும் முறைகேடுகளைத் தடுத்து, இம்முறை நீட் தேர்வை எவ்வித குளறுபடிகளும் இன்றி நேர்மையாக நடத்துவதற்காகவே தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000, பிரிவு 69A-இன் கீழ் இந்த தற்காலிகக் கட்டுப்பாட்டை மத்திய அரசு விதித்துள்ளது.

Comments are closed.