பாரதிராஜாவின் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி…* “பூங்காற்று திரும்புமா” கவிஞர் வைரமுத்து இரங்கட்பா..!
இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவால் இன்று (ஜூன் 10) காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் சென்று பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நீலாங்கரையில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜா உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி, நடிகைகள் ரேவதி, ராதிகா, சுகன்யா உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். இந்தநிலையில், தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், பாரதிராஜா உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். மு.க.ஸ்டாலினுடன் டி.ஆர்.பாலு, கவிஞர் வைரமுத்து ஆகியோர் உடன் வந்தனர். முன்னதாக, தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா மறைவு பெரும் வேதனையைத் தருகிறது. தமிழ்த்திரையுலகிற்குப் பேரிழப்பாகிவிட்ட அந்தப் பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பூங்காத்து திரும்புமா?
பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்திய கவிஞர் வைரமுத்து இரங்கற்பா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ‘ ‘பிதாமகனே போய் விட்டாயா? அடைத்து கிடந்த திரையுலக கதவுகளை திறந்தவெளிக்கு திறந்து விட்டவனே..
ஆகாயத்திற்கு அடுத்து அதிக நட்சத்திரங்களை அறிமுகம் செய்தவனே…
என்னையும் சுயமரியாதையோடு சுடரொளி வீசச் செய்தவனே…
உடன்பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே என்ற தலைவர்களின் மொழிக்கு இணையாக ‘என் இனிய தமிழ் மக்களே’ என்று ரத்தினச் சொற்களுக்கு முத்திரை சேர்த்தவனே..
நீ மாயக்காரன். புழுதியை பொன் செய்தாய்..
சினிமாவின் நிறம் வெள்ளை என்று இருந்ததை கருப்பு என்று மாற்றிய கலையாலன் நீ…
இடிந்த சுவர்களும், உடைந்த மனிதர்களும், கிழிந்த வாழ்க்கையும் உன் கலையின் கச்சாப் பொருட்கள்..
இந்த கரட்டுப்பட்டியை தில்லி நகரத்திற்கு கொண்டு சேர்த்த அல்லி நகரத்து அரசன் நீ..
இனி நான் எப்படி தனியாக தேனி போவேன்.
மேற்கு தொடர்ச்சி மலை அருவிகள் அழுது கொண்டே கேட்குமே ‘எங்கே பாரதிராஜா?’ கத்தாலங்காட்டு கரிச்சான் கேக்குமே “எங்கே பாரதிராஜா? கருவேல மரம் கேட்குமே “எங்கே பாரதிராஜா?’ என்ன பதில் சொல்வேன்..
எப்படி நான் தனித்திருப்பேன்..
நீ தூரிகை நான் வண்ணம்
நான் தூரிகை நீ வண்ணம்
தூரிகை இல்லாமல் வண்ணமும் வண்ணம் இல்லாமல் தூரியையும் என்னத்துக்கு ஆகும். என்னை அழவிடு.. அழவிடு… உடம்பின் உப்பெல்லாம் கண்ணீரை கரையட்டும்.
இனி என்ன எழுத? நடிகர் திலகம் போல் நானும் புலம்புகிறேன்
‘பூங்காத்து திரும்புமா?
என் பாட்ட விரும்புமா?
பாராட்ட
மடியில் வைத்து தாலாட்ட
எனக்கு ஒரு தாய்மடி கிடைக்குமா?
முதல் மரியாதை செய்தவனே…
உனக்கு என் இறுதி மரியாதை. என உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

Comments are closed.