Rock Fort Times
Online News

அ.தி.மு.க. பிளவுபட்டதால் நிர்வாகி தீக்குளித்து தற்கொலை:- உருக்கமான வீடியோ பதிவு…!

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், திருப்பனந்தாள் உப்புக்கார தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 32). இவர் அ.தி.மு.க. வர்த்தக அணியின் மாவட்ட இணை செயலாளராக
பதவி வகித்து வந்தார். தீவிர அ.தி.மு.க. விசுவாசியான இவர் சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி தோல்வி அடைந்ததால் வேதனை அடைந்தார்.
மேலும், அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு காரணமாக கடும் அதிர்ச்சியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மகேந்திரன் நேற்று( மே 31) மாலை தனது முகநூல் பக்கத்தில் உருக்கமான வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோவில், ‘அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும். அ.தி.மு.க தோற்றுப் போனது வேதனை அளிக்கிறது. அடுத்த பிறவியிலும் நான் அ.தி.மு.க.வின் எளிய தொண்டனாக பிறக்க வேண்டும். எனது உடலுக்கு எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார். இதனை பார்த்ததும் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பல்வேறு இடங்களில் மகேந்திரனை தேடினார்கள். அப்போது திருப்பனந்தாள் அருகே பாலூர் என்ற இடத்தில் எரிந்த நிலையில் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்தவர் மகேந்திரன் என்பதும், அவர் தீக்குளித்து தற்கொலை செய்ததும் தெரிய வந்தது. பின்னர் மகேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பனந்தாள் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆர்.கே.பாரதி மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் மருத்துவமனையில் குவிந்தனர். இந்த சம்பவம் குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் அ.தி.மு.க. நிர்வாகி மகேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்த எடப்பாடி பழனிசாமி திருப்பனந்தாள் வருகை தந்தார். பின்னர், மகேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிசாமி, அவரது குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்