தமிழகத்தைச் சேர்ந்த மூத்த பெண் வழக்கறிஞர் மோகனா உட்பட உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக 5 நீதிபதிகள் நியமனம்…!
உச்ச நீதிமன்றத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த மூத்த பெண் வழக்கறிஞர் வி.மோகனா உட்பட 5 புதிய நீதிபதிகளை நியமனம் செய்ய மத்திய அரசு இன்று (ஜூன் 1) ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வெங்கிட சுப்பிரமணிய மோகனா, மும்பை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட் தலைமை நீதிபதி ஷீல் நாகு, மத்திய பிரதேச ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் சச்தேவா மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஐகோர்ட் நீதிபதி அருண் பல்லி ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய சட்ட அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.
வாழ்க்கை குறிப்பு,
நீதிபதி இந்து மல்ஹோத்ராவுக்குப் பிறகு, வழக்கறிஞர் பதவியில் இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்படும் இந்தியாவின் இரண்டாவது பெண்மணி மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் பெண் வழக்கறிஞர் என்ற பெருமையைப் பெறுகிறார் மோகனா. கோவையில் பிறந்து வளர்ந்த இவர், 1988-ம் ஆண்டு கோயம்புத்தூர் சட்டக் கல்லூரியில் முதல் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பை முடித்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் தனது சட்டப் பணியைத் தொடங்கி, பின்னர் இந்திய உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக (Senior Advocate) நீண்டகாலம் பணியாற்றினார். உச்ச நீதிமன்ற வரலாற்றில் வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியான இரண்டாவது பெண் என்ற அரிய சாதனைக்குரியவர்.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த இந்து மல்ஹோத்ரா, வழக்குரைஞராகப் பணிபுரிந்துகொண்டிருந்த காலத்தில் அவருடைய அலுவலகத்தில் மோகனா சேர்ந்தார். முக்கியமான பல்வேறு சட்டப் பணிகளில் பங்கேற்றார். தொடர்ந்து, மூத்த வழக்குரைஞர்கள் சி.எஸ். வைத்தியநாதன், கபில் சிபல், கே.கே. வேணுகோபால், ப.சிதம்பரம், அருண் ஜெட்லி, டி.ஆர். அந்தியார்ஜுனா உள்பட புகழ்பெற்ற பல சட்ட வல்லுநர்களுடன் இணைந்து மோகனா பணியாற்றியுள்ளார்.வாழ்க்கை முழுவதும் சட்டப் பணி மற்றும் நீதித் துறையில் பெண்களின் அதிக பிரதிநிதித்துவத்துக்காக வாதிட்டு வந்திருக்கும் மோகனாவை, இப்போது, உச்ச நீதிமன்ற நீதிபதியாக கொலீஜியம் பரிந்துரைத்திருக்கிறது.
கோவையில் எளிய வழக்குரைஞராகப் பணியைத் தொடங்கி, நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றத்தை எட்டியுள்ள மோகனா முதல் தலைமுறை இளம் வழக்குரைஞர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறார் என்றால் அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

Comments are closed.