Rock Fort Times
Online News

கோடை விடுமுறை முடிந்து சென்னைக்கு படையெடுக்கும் பொதுமக்கள்:* விமானக் கட்டணம் அதிகரித்ததால் அதிர்ச்சி…!

கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் ஜூன் 4ம் தேதி திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கோடை விடுமுறையைக் கொண்டாடுவதற்காக தங்களது சொந்த ஊர்களுக்கும், சுற்றுலாத் தலங்களுக்கும் சென்றிருந்த சென்னைவாசிகள் கார்கள், பேருந்துகள், விமானங்கள் மூலம் மீண்டும் சென்னை திரும்பி வருகின்றனர். இதனால் சென்னை செல்லும் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதே சமயம், சென்னை வழியாக செல்லும் ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. அதேபோல், சேலம், மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், தூத்துக்குடி, திருவனந்தபுரம், கொச்சி ஆகிய விமான நிலையங்களில் இருந்து சென்னை செல்லும் அனைத்து விமானங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. சாதாரண நாட்களில் மதுரையில் இருந்து சென்னை செல்வதற்கு விமான கட்டணம் ரூ. 5,800 ஆக இருந்த நிலையில், இதே வழித்தடத்தில் இன்று (ஜூன் 01) பயணம் மேற்கொள்வதற்கு ரூ. 17,303 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்வதற்கு ரூ. 6,623 ஆக இருந்த விமான பயணக் கட்டணம், இன்று இதே வழித்தடத்தில் பயணம் மேற்கொள்வதற்கு ரூ. 17,272 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து சென்னை செல்வதற்கு ரூ.14,404 ஆகவும், கோயம்புத்தூரில் இருந்து சென்னை செல்வதற்கு ரூ.16,504 ஆகவும், சேலத்தில் இருந்து சென்னை செல்வதற்கு ரூ. 8,105 ஆகவும், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்வதற்கு ரூ. 14,624 ஆகவும், கொச்சியில் இருந்து சென்னை செல்வதற்கு ரூ. 11,055 ஆகவும் விமானக் கட்டணம் உயர்ந்துள்ளது. விமான எரிபொருளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதும் விமான கட்டண உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்