கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகரான செந்தில் பாலாஜி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் 2011ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர். அப்போது, போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் எஞ்சினியர்களை பணி நியமனம் செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போதைய, போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகவும் புகார் சொல்லப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதற்கிடையில் அவர், திமுகவில் இணைந்து கடந்த திமுக ஆட்சியில் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். இந்தசூழலில், கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது. அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து ஜாமீன் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அதன்படி, அவர் பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்குத் தமிழக அமைச்சரவையிலும் இடம் அளிக்கப்பட்டது. அதன்படி, அவர் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராகக் கடந்த செப்டம்பர் மாதம் முதல் பதவி வகித்து வந்தார். இதற்கு உச்ச நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்ததால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையில், செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உட்பட 4 பேர் மீது விசாரணை நடத்த அப்போதைய திமுக ஆட்சியில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் நீதிமன்ற விசாரணை இதுவரை தொடங்கவில்லை. இந்தநிலையில் செந்தில் பாலாகியை மீண்டும் விசாரிக்க அனுமதி வேண்டும் என புதிதாக பொறுப்பேற்றிருக்கும் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது. செந்தில் பாலாஜியை விசாரிப்பதற்கான ஆதாரங்கள் மற்றும் ரகசிய குறிப்புகளுடன் மாநில அரசின் தலைமைச் செயலாளர் சாய் குமாருக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதி செந்தில் பாலாஜியை மீண்டும் விசாரிக்க அனுமதி வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. இது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

Comments are closed.