தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை பிடித்த தமிழக வெற்றிக் கழகம், கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியை பிடித்துள்ளது. முதல்-அமைச்சராக அக்கட்சியின் தலைவர் விஜய் நேற்று(மே 10) பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர். தற்காலிக சபாநாயகராக, சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ.. கருப்பையா தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், தற்காலிக சபாநாயகர் தலைமையில் சட்டப்பேரவை முதல் கூட்டம் இன்று( மே 11) காலை 9.30 மணிக்கு கூடியது. தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் தற்காலிக சபாநாயகர் கருப்பையா, பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதலாவதாக பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள்
மற்றும் திமுக, அதிமுக, தேமுதிக, பா.ம.க. கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஒவ்வொருவராக எம்எல்ஏக்களாக பதவியேற்றுக் கொண்டனர். இந்தநிலையில், தவெக அரசின் அமைச்சர் கீர்த்தனா, எம்.எல்.ஏ. ஆக தேர்வான சான்றிதழை எடுத்து வராததால் சட்டப் பேரவையில் உறுப்பினராக பதவியேற்கவில்லை. இதனால், பிற அமைச்சர்களுடன் அவர் உறுப்பினராக பதவியேற்க முடியாமல் போனது. சான்றிதழை கொடுத்த பிறகு பதவியேற்றுக் கொள்வார் என தெரிகிறது.

Comments are closed.