Rock Fort Times
Online News

விஜய்க்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் ஆதரவு…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக அதுவும் தனித்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக்கழகம் 108 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியது. இருந்தாலும் ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சி தலைவர்களிடம் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆதரவு கோரினர். இதன் பயனாக 5 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ், 2 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 2 உறுப்பினர்கள் கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்தன. இதன்மூலம்
த.வெ.க. பலம் 116 ஆக அதிகரித்தது. அந்த உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்துடன் தமிழக ஆளுநர் அர்லேகரை நேற்றைய தினம் விஜய் சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால், பெரும்பான்மை பலத்துடன் வந்தால் தான் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படும் என்று ஆளுநர் திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால், 2 உறுப்பினர்களைக் கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவை தமிழக வெற்றி கழகம் கோரியது. நீண்ட ஆலோசனைக்கு பிறகு இன்று( மே 9) விசிக தலைவர் திருமாவளவன் தமிழக வெற்றிக்கழகத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தார். அதேபோல, நேற்று தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்காத இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி இன்று(மே 9) தாமாக முன்வந்து விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதன்மூலம், தமிழக வெற்றி கழகத்தின் பலம் 120 ஆக அதிகரித்துள்ளது. இதன்காரணமாக விஜய் முதலமைச்சராவதில் எந்த சிக்கலும் இனி இருக்காது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்