Rock Fort Times
Online News

புதுச்சேரி விடுதியில் தமிழக அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் இபிஎஸ் ஆலோசனை…!

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளி தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் ஆட்சியை கைப்பற்றும் அளவுக்கு(118 உறுப்பினர்கள்) தவெகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால், தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தரும்படி காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கடிதம் அனுப்பினார். இதில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ்,
தனது 5 எம்எல்ஏக்களுடன் நிபந்தனையுடன் தவெகவுக்கு ஆதரவு அளித்தது. அதற்கான கடிதத்தையும் விஜயிடம் காங்கிரஸ் கட்சியினர் நேரில் சந்தித்து வழங்கினர். இதனால் தவெக ஆட்சி அமைக்க எம்எல்ஏக்கள் பலம் 113 ஆக உயர்ந்தது. இதனால் தன்னை ஆட்சி அமைக்க அழைக்கும்படி தமிழகத்தின் தற்போதைய பொறுப்பு ஆளுநரை தவெக தலைவர் விஜய் சந்தித்து எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை வழங்கினார். இருப்பினும் போதிய எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லாததால் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படவில்லை. மேலும், 118 எம்எல்ஏக்கள் பட்டியலுடன் வந்தால்தான் ஆட்சி அமைக்க முடியும் என பொறுப்பு ஆளுநர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம், நேற்று சென்னை பசுமை வழி சாலையில் உள்ள பழனிசாமி இல்லத்தில் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையிலான எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோர் ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து அதிமுகவின் 53 எம்எல்ஏக்களும் புதுச்சேரி பூர்ணாங்குப்பத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளனர். இதனிடையே அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி புதுச்சேரிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகளை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்