நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது. ஆனால், ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்கள் வேண்டும். இந்தநிலையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு, 5 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. இதன்மூலம் விஜயின் பலம் 113 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில் தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு தமிழக ஆளுநரை விஜய் சந்தித்து கடிதம் வழங்கினார். ஆனால், பெரும்பான்மையை நிரூபித்தால் மட்டுமே ஆட்சி அமைக்க அழைக்க முடியும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேபோல, காங்கிரஸ் கட்சி நாளை(மே 8) ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செலவப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படும் மத்திய பாஜகவை கண்டித்தும், அவர்களின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநரை கண்டித்தும் மாவட்ட தலைநகரங்களில் நாளை (08.05.2026) வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு தமிழக ஆளுநருக்கு எதிராக தங்களது கண்டனங்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.