தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று (04-05-2026) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 85.10% வாக்குகள் பதிவாகி வரலாற்று சாதனை படைத்திருந்தது. இந்த தேர்தலில், திமுக, அதிமுக, நாதக, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. முதல்வர் வேட்பாளர்கள் பட்டியலில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, சீமான், விஜய் ஆகியோர் களத்தில் உள்ளனர். இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை, சில மணி நேரத்தில் முன்னிலை நிலவரம் தெரியவரும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு,8:30 மணியளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர ஓட்டுகள் அடுத்தடுத்து எண்ணப்படும். வாக்கு எண்ணும் மையத்தின் ஒரு பகுதியாக தபால் வாக்குகள், மற்றொரு பகுதியில் ஈவிஎம் வாக்குகள் எண்ணப்படும். ஒரு மையத்தில் 500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேசை என்ற விகிதத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படவுள்ளன. தேர்தல் பணியில் ஈடுபட்ட 3.60 லட்சம் பேரில் 2.88 லட்சம் பேர் தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். சேவை வாக்காளர்கள் 18,000 பேர் தபால் வாக்களித்துள்ளனர். 12D படிவம் பெற்ற 85+ வயது மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என மொத்தம் 1.73 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.