Rock Fort Times
Online News

சாத்தான்குளம் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 9 பேரும் ஜூன் 1-க்குள் மேல்முறையீடு செய்யலாம்:* உயர்நீதிமன்றம்!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட போலீஸார் 9 பேரும் ஜூன் 1-க்குள் மேல்முறையீடு செய்யலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020ல் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது சாத்தான்குளம் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இதுதொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து, அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜா, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து ஆகியோரை சிபிஐ கைது செய்தது. இந்த வழக்கை மதுரை மாவட்ட நீதிமன்றம் விசாரித்து, ஸ்ரீதர் உட்பட 9 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்தது. தூக்கு தண்டனையை உறுதிப்படுத்தக் கோரி தமிழக அரசு மற்றும் சிபிஐ தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், ராமகிருஷ்ணன் அமர்வில் இன்று( ஏப்.30) விசாரணைக்கு வந்தது. ஸ்ரீதர் உட்பட 9 பேரும் சிறையில் இருந்தபடி காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த வழக்கு தமிழகம் முழுவதும் உற்றுநோக்கப்படும் வழக்காகும். எனவே, ஜூன் 1-க்குள் மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்யுங்கள். ஜூன் 4 முதல் தினமும் விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பளிக்கப்படும். விசாரணை ஜூன் 4-க்கு ஒத்தி வைக்கப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்