ஆண்டுதோறும் சித்திரை முழு நிலவு நாளன்று மாண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் கொடுக்கும் பொருட்டும், ‘சுந்தரத் தோளுடையான்’ என்று ஆண்டாள் மங்களாசாசனம் செய்த சுந்தரத் தோள்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை ஆண்டாள் சாற்றிக்கொண்ட திருமாலையை ஏற்றுக் கொள்ளும் பொருட்டும், சுந்தரராஜப் பெருமாள் கள்ளர் திருக்கோலத்துடன் மதுரை மாநகருக்கு எழுந்தருள்வார். இந்நிகழ்வு மதுரை மாநகரில் சித்திரைப்
திருவிழாவாக இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோல இந்த ஆண்டு திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. 28-ம் தேதி மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், 29-ம் தேதி தேரோட்டமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று மாலை 6.15 மணியளவில் அழகர் கோயிலில் உள்ள கொண்டப்ப நாயக்கர் மண்டபத்திலிருந்து கள்ளர் திருக்கோலத்துடன் தங்கப் பல்லக்கில் அழகர் புறப்பட்டார். அங்கிருந்து பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி மற்றும் அப்பன் திருப்பதி ஜமீன்தார் மண்டபம், சுந்தர்ராஜன்பட்டி மறவர் மண்டபம் ஆகியவற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று(ஏப்.30) அதிகாலை 2 மணிக்கு கடச்சனேந்தலில் எழுந்தருளினார். இந்நிலையில் மதுரை மாநகர் மூன்றுமாவடி அருகே இன்று காலை பக்தர்கள் எதிர் கொண்டு கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அழகரை வரவேற்றனர். இன்று இரவு 8.30 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலுக்கு
செல்லும் கள்ளழகர், தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி திருவில்லிபுத்தூர் சூடிக்கொடுத்த நாச்சியார் ஆண்டாளுடைய திருமாலையை அணிந்து கொள்கிறார். பிறகு நாளை (மே.1) அதிகாலை 2 மணி அளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோயில் எதிரே அமைந்துள்ள ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளுகிறார். அங்கிருந்து புறப்படும் கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் ஆழ்வார்புரம் ஏவி மேம்பாலம் அருகே உள்ள வைகை ஆற்றில் அதிகாலை 5.35 – 5.55 மணிக்குள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வைகை ஆற்றில் எழுந்தருள வருகை தரும் அழகரை வெள்ளிக்குதிரை வாகனத்தில் வீரராகவப் பெருமாள் எதிர் கொண்டு வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் இந்நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். பிற்பகல் 12 மணியளவில் ராமராயர் மண்டபத்தில் அழகருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்பிறகு இரவு 9 மணி அளவில் வண்டியூர் வீரராக பெருமாள் கோயிலில் கள்ளழகர் எழுந்தருள்கிறார். கள்ளழகர், ஆற்றில் இறங்கும் வைபவத்தில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் மதுரையில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால், மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

Comments are closed.