Rock Fort Times
Online News

இறப்புச் சான்றிதழ் கிடைக்காததால் சகோதரியின் எலும்பு கூட்டை வங்கிக்கு எடுத்து வந்த நபரால் பரபரப்பு…!(வீடியோ இணைப்பு) 

ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தை சேர்ந்த ஜிது முண்டா (55) என்பவரின் தங்கை கக்ரா முண்டா இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது கணவர் மற்றும் ஒரே குழந்தையும் அவருக்கு முன்னரே இறந்து விட்டனர்.  கக்ரா முண்டா மல்லிபாசியில் உள்ள ஒடிசா கிராமின் வங்கியில் கணக்கு வைத்திருந்தார். அதில் ரூ.19,300 பணம் இருந்துள்ளது.  இதனை எடுப்பதற்காக ஜிது முண்டா சம்பந்தப்பட்ட வங்கியான ஒடிசா கிராமினை அணுகியுள்ளார். ஆனால்,  கக்ரா முண்டா இறந்தது தெரியாமல் சம்பந்தப்பட்டவர் வரவேண்டும் என  வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.  அவர் இறந்துவிட்டார் என ஜிது கூறியுள்ளனர். அப்படி என்றால்  உன் சகோதரியின் இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ் போன்ற ஆவணங்களை கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஆனால் பழங்குடியினரான ஜிதுவிடம் முறையான ஆவணங்கள்  எதுவும் இல்லை. இதனால் சகோதரி இறந்துவிட்டதாக கூறியதை நம்பாத வங்கி ஊழியர்கள் அவரை அலைக்கழித்து வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ஜிது முண்டா, சுடுகாட்டிற்குச் சென்று புதைக்கப்பட்ட தனது சகோதரியின் உடலைத் தோண்டி, அந்த எலும்புக்கூட்டையே ஆதாரமாகக் காட்ட வங்கிக்குக் கொண்டு சென்றுள்ளார். எலும்புக்கூட்டை பார்த்த வங்கியில் இருந்தவர்கள் அதிர்ச்சியிலும், பயத்திலும் உறைந்தனர். இந்தச் சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் தலையிட்டு, ஜிதுவிடம் இருந்து எலும்புக்கூட்டைப் பெற்று மீண்டும் அடக்கம் செய்ய உதவினர். மேலும், அவருக்குத் தேவையான சட்டப்பூர்வ வாரிசுச் சான்றிதழைப் பெற்றுத் தந்து, அந்தப் பணத்தை அவரிடம் ஒப்படைக்க வங்கி அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர். ஜிது முண்டா அவரது தங்கையின் எலும்புக்கூட்டை சுமந்து செல்வது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பலரும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, “ஒரு ஏழை மனிதன் தன் சொந்தப் பணத்தைப் பெறுவது இவ்வளவு கடினமா?” என கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்